satrumun


★ இணையமலர் தமிழ் No 1 இணையதள நாளிதழ் | தமிழக அரசியல்| கல்வி மலர் | மாவட்டம் | சினிமா மலர் | விவசாயமலர் | இந்தியா| பொது | போட்டோ | கார்ட்டூன்ஸ் |புத்தக மதிப்புரை |உலக தமிழர் செய்திகள் | கலை மலர் | சிறப்பு மலர்| விளையாட்டு மலர் |ஆன்மிக மலர் | உலகம்★

Thursday, May 13, 2021

இந்தியாவுக்கு ரூ.7,300 கோடி நன்கொடை வழங்கிய 27 வயது சி.இ.ஓ.,!

 


டொரன்டோ: பிட்காயினுக்கு அடுத்தப்படியாக மிகப்பெரிய அளவில் புழங்கக்கூடிய கிரிப்டோகரன்சி 'எதிரியம்'. அதன் இணை நிறுவனரும், சி.இ.ஓ.,வுமான 27 வயது இளைஞர் விட்டாலிக் பூட்டரின், கொரோனா நிவாரண நிதியாக ரூ.7,300 கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சியை வழங்கியுள்ளார்.

கொரோனாவின் 2-ம் அலையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உலக நாடுகள் பலவும் உதவிக்கரம் நீட்டியுள்ளன. கூகுள் நிறுவனம் ரூ.135 கோடியும், டுவிட்டர் ரூ.110 கோடியும் அறிவித்தன. இது போன்ற பல முன்னணி நிறுவனங்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள், தடுப்பூசிகளுக்கு நன்கொடை வழங்கி வருகின்றன. இந்நிலையில் தான் எதிரியம் கிரிப்டோகரன்சி இணை நிறுவனர் விட்டாலிக் ரூ.7,300 கோடி நன்கொடை அறிவித்துள்ளார்.

ரஷ்யாவில் பிறந்து கனடாவிற்கு புலம்பெயர்ந்தவரான விட்டாலிக் தனது 19 ஆவது வயதில் எதிரியம் கிரிப்டோகரன்சியை உருவாக்கினார். சிறந்த புரோகிராமரான இவர் பணப்பரிவர்த்தனையில் வங்கிகளிடம் அதிகாரம் செல்லாமல், அவை பணம் புழங்கக் கூடிய மக்களிடமே பரவலாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கிரிப்டோகரன்சியை உருவாக்கினார். ஒரு எதிரியத்தின் இன்றைய (மே 13) இந்திய மதிப்பு ரூ.3.1 லட்சம் ஆகும். இவர் 500 எதிரியம் (ரூ.15 கோடி) மற்றும் 50 டிரில்லியன் ஷிபு இனு நாணயங்களை நன்கொடை அளித்துள்ளார்.

இந்தியா கிரிப்டோகரன்சி நன்கொடைகளை பெறுவதற்காக கோவிட் கிரிப்டோ நிவாரண நிதி என்ற ஒன்றை உருவாக்கியுள்ளது. அந்த நிதிக்கு எதிரியம், பிட்காயின், டோஜ், ட்ரான், காஸ்மாஸ், டெசோஸ் போன்ற பல கிரிப்டோகரன்சிகளை கொண்டு நிதியளித்தால் ஏற்றுக்கொள்வார்கள்.

இதுவரை இந்த நிதியிலிருந்து ஐ.சி.யூ வென்டிலேட்டர்கள் மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுக்காக ராஜீவ் நினைவு அகாடமிக் நலவாழ்வு அறக்கட்டளைக்கு ரூ.55 லட்சமும், ரவுண்ட் டேபிள் அறக்கட்டளைக்கு ரூ.94 லட்சமும், ஏ.சி.டி. கிராண்ட்ஸ் மற்றும் யுனைடெட் வே ஆப் பெங்களூரு ஆகிய அறக்கட்டளைகளுக்கு ரூ.7 கோடியும் அளிக்கப்பட்டுள்ளன.